தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியில் முரண் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுகவின் கனிமொழி சந்தித்துப் பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் தவெகவுடன் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கொடுத்த பேட்டியில், ''தவெகவுடன் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தவெக தலைவர் விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளார்.தென்னிந்தியா தன் கையில் இருக்க வேண்டும் எனக் காங்கிரஸ் நினைக்கிறது. தங்கள் முடிவுக்கு விஜய் முகமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பார். காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைந்தால் இரு கட்சிகளுக்கும் லாபம். கூட்டணியை விஜய் அறிவிப்பார்''எனத் தெரிவித்துள்ளார்.