Advertisment

பரபரப்பான அரசியல் சூழல் : காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழகம் வருகை!

Girish-Chodankar-mic

கோப்புப்படம்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் கடந்த 25ஆம் தேதி (25.01.2026) திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். 

Advertisment

இந்த பேச்சைச் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்கச் சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” எனப் பதிவிட்டிருந்தார். இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்துக் கடந்த 28ஆம் தேதி (28.01.2026) திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசியிருந்தார். 

Advertisment

அதே சமயம் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களில், “மதுரை வடக்கு சட்டமன்ற வாக்காளர்களின் ஓட்டுக் காங்கிரசின் கை  சின்னத்திற்கே” என்ற வாசகங்களைக் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டது. இவ்வாறாக  ஒட்டப்பட்ட போஸ்டர்,  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து  காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் நேற்று (30.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “மதுரை  வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட விரும்புகிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.  

manickam-tagore-mp-pm-1

அதற்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துப் பேசுகையில், “எல்லா தொகுதிக்கும் விருப்ப மனு கொடுக்கிறார்கள். இந்த தொகுதியில் காங்கிரஸ் முதலில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலமாக இருக்கிற தொகுதி ஆகும்.13ஆம் தேதிக்குப் பிறகு தொகுதியினுடைய பி.எல்.ஏ. கூட்டம் நடத்த உள்ளோம். அதில் காங்கிரஸ் கட்சியின் பலத்தைக் காட்டுவோம். சும்மா விட்டுவிட்டு போயிருவோம் என்று நினைக்கிறீர்களா?. சும்மா பாத்துட்டு திரும்பிப் போகிறதுக்குக் காங்கிரஸ்காரன் ஒன்றும் வந்தே மாதரம் ஜெய் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்க தெரியும். தேர்தல் அறிவிக்கட்டும் கூட்டணி பேசட்டும் தொகுதி பங்கிட்டு வரட்டும். அதற்கு அப்புறம் இந்த பேச்சு வர வேண்டும். அதக்கு நிறைய நாள் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நாளை (01.02.2026) தமிழகம் வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது ஒரு பகுதியாக நாளை காலை சத்யமூர்த்திபவனில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருக்கு கிரிஷ் சோடங்கர் தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இதற்காகக் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் பங்கு பெறுவதாக இருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்சி நிகழ்ச்சிகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் கே.சி. வேணுகோபாலின் தமிழகம்  வருகை திட்டம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Assembly Election 2026 Tamilnadu congress Girish Chodankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe