வாக்கு திருட்டு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீதும் பாஜகவின் மீதும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்து வருகிறார். தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்புகளை தெரிவித்து வருகிறது. நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி 'ஹைட்ரஜன் குண்டு' வீசப்போவதாக தெரிவித்து வாக்கு திருட்டு தொடர்பாக திரும்பவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் விஜயதரணி பேசுகையில், ''நாட்டில் ஹைட்ரஜன் குண்டையும், ஆட்டம் பாமையும் போடுவேன் போடுவேன் என்று நாட்டு மக்களை பயமுறுத்துவது ரொம்ப தப்பு என்று நான் நினைக்கிறேன். அந்த அளவில் குண்டு போடும் கலாச்சாரத்தை காங்கிரஸ் கைவிட வேண்டும். வாக்கு திருட்டு விவகாரம் என்பது நிச்சயமாக கொளத்தூர் பகுதியில் சென்னையில் முதலமைச்சர் தொகுதியில் 79,000 வாக்குகள் தவறான வாக்குகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஒரே வீட்டில் 89 வாக்கு இருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் ஒரு படுக்கையறை தான் இருக்கிறது. அதில் 89 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். அப்படியெல்லாம் தமிழ்நாட்டிலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எஸ்ஐஆர் முழுவதுமாக நடத்தி முடித்தால் தான் உண்மையான வாக்குகள் என்ன என்பது தெரியவரும். அந்த உண்மையான வாக்குகளை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள் எதிர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக உண்மையான வாக்காளர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த வகையில் எந்த ஹைட்ரஜன் பாமை போட்டாலும், ஆட்டம் பாம் போட்டாலும் மக்களை துரோகிக்க கூடிய செயலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள். நேர்மையோடு வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதனால் அதைத் தடுப்பதற்கு எந்த கட்சி வந்தாலும், யார் பாம் போட்டாலும் சரி அது நடக்காது. உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் மத்திய அரசு தெளிவாக இருக்கும். இந்தியா முழுவதும் இதைத் தெளிவாக செய்வார்கள்'' என்றார்.