இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்த தேர்தல்களைச் சிறப்பாக நடத்த வேண்டித் தேர்தல் அதிகாரிகளும் அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் தலைமை அதிகாரி, தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று, தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே, இந்த ஐந்து மாநில தேர்தல்களுக்கான தேதிகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனப் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிவேகமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத போதும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தற்போது அசாமில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த, தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வியூகம் வகுத்துத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே 42 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us