ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இந்த  பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (17-02-26) தமிழகம் வந்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் சென்னை முகப்பேரி பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்பதற்காக கே.சி.வேணுகோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக நின்ற காங்கிரஸ் நிர்வாகிகள், ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்ற பதாகைகளை கையேந்தி நின்று கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளானது.

Advertisment

சென்னை விமான நிலையத்துக்கு வந்த கே.சி.வேணுகோபால், அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க அரசை கண்டித்து நடைபெற்ற பாதயாத்திரை நிறைவு விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். அதன் பின்னர், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பி இன்று மாலை முகப்பேர் பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், கே.சி.வேணுகோபால் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் முகப்பேர் பகுதியில், ‘அதிகாரமற்ற அரசியல்! அர்த்தமற்ற அரசியல்! வேண்டும்! வேண்டும்!!... ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சி உடனே கூட்டணி வேண்டும்... அகில இந்திய தலைமையே புரிந்து கொள்! புரிந்து கொள்!! வேண்டாம்! வேண்டாம்! தன்மானம் இழந்து சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்’ என்று சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அகில இந்திய தலைமைக்கு விடுத்திருந்து ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு எழுதப்பட்டுள்ளது. 

Advertisment