சிதம்பரம் நகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் குறித்து இரு பிரிவினர் உண்ணாவிரதம், உண்ணும் விரதம் என தனித்தனி போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து மாவட்ட தலைவர் நியமனம் செய்ததில் ஒருவர் கூட தலித் சமூகத்தினரை நியமிக்கவில்லை என்றும், அதேபோல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் கூட தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை நியமிக்கவில்லை. எனவே மாநில கட்சிக்குகவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றும் வகையில் ஜன 27-ந்தேதி ஒரு நாள் சிதம்பரத்தில் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில துணைத் தலைவர் எம். செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் போராட்ட அனுமதி கோரி மனுவும் கொடுத்துள்ளார். அதே போல் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர். மக்கின் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களை கண்டித்து உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்தும் செயலை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கும் அதே நாளில் உண்ணும் விரதம் நடைபெறும் என்றும், சிதம்பரம் நகரில் சாதியின் பெயரால் கலவரம் செய்ய நினைக்கும் சுயநலவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
Follow Us