டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 77வது குடியரசு தின விழா நேற்று (26.01.2026) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில், டெல்லியின் செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஆகியவை நடைபெற்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது வரிசையில் இருவரும் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்றாவது வரிசையில் அமரவைக்கப்பட்டது அவமதிப்புக்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை பா.ஜ.க அவமதிக்கிறது என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “ஏன் இந்த நெறிமுறை குழப்பம்? மோடியும் அமித் ஷாவும், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுக் காந்தியை அவமதிக்க விரும்புகிறார்கள் என்பதற்காகவா? குறிப்பாக குடியரசு தினத்தன்று, எதிர்க்கட்சித் தலைவர்களை இப்படி அவமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/rahrep-2026-01-27-09-52-43.jpg)