நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பியான சுதா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். 

இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் (04.08.2025) காலை எம்.பி. சுதா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் எம்.பி சுதா கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து எம்.பி சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. டெல்லியில் எம்.பி. ஒருவரின் தங்கச் செயினை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எம்.பி. சுதாவிடம் இருந்து செயின் பறித்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகையையும் போலீசார் மீட்டனர்.