வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்தும் பரபரப்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் போன்றவை ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. நீண்ட காலமாக, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், சமீபத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் மற்றும் சில நிர்வாகிகளின் பேச்சுக்கள், இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்து வந்தன.
குறிப்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைமை கராராக கூறியதாகத் தகவல் வெளியானது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சனையில் ஏற்படாது என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார். மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நேற்று (25-01-26) திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெற்றலாம் தலைமை புரிந்து கொண்டு அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணியை நாம் காப்பாற்றி கொண்டிருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று பேசினார்.
இவரின் பேச்சை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/26/manic-2026-01-26-15-46-09.jpg)