Congress MP Karti Chidambaram criticizes on the film Parasakthi movie
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து தை இரண்டாம் நாளான இன்று (16-01-26) மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களுக்கு நண்பனாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ் புத்தாண்டு என்றாலே அது சித்திரை 1 தான். அதில் நான் தெளிவாக உள்ளேன். என்னை பொறுத்தவரைக்கும் இந்தியாவில் எந்த நாளை வேண்டுமானாலும் எல்லோரும் கொண்டாடலாம். நிறைய கொண்டாடி நிறைய நாள் லீவ் விட்டால் அதைப்பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை.
பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. இதனால், ஒரு சாரிடான் மாத்திரை மிச்சம். அந்த படத்தை நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதாக இல்லை. அது ஒரு கமர்ஷியல் படம். அவ்வளவு தான். அது வெற்றி பெறும் இல்லையென்றால் தோல்வியடையும். அதற்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. ஒரு திரைப்படத்தை வைத்து ஒரு அரசியல் நரேட்டிவ் (Political Narrative) செட் பண்ணலாம் என நினைத்தால் அதை விட அபத்தம் எதுவும் இருக்க முடியாது.
ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதிய சிந்தனை கிடையாது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரதிநிதிகள் தேர்தலில் வென்று அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கு தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் என்னென்ன எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த சராசரி எதிர்பார்ப்பு தான் காங்கிரஸுக்கும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் திமுக இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. காங்கிரஸ் கட்சி அந்த கூட்டணியில் தான் இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தான் காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் அடுத்த 4 மாதம் பிரதமர் மோடி தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். வேட்டி சட்டை தான் உடுத்துவார், இட்லி தோசை தான் சாப்பிடுவார், திருக்குறளை பற்றி பேசுவார்” என்று கூறினார்.
Follow Us