“சித்தராமையா சிறந்த தலைவர்” - லீக் வீடியோ சர்ச்சையானதால் பல்டி அடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

siddabatil

Congress MLA BR Patil hits back after leak video controversy about Siddaramaiah

கர்நாடகா மாநிலத்தில், சித்தராமையா முதல்வராக சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் பதவிக்கான விவாதம் கர்நாடகா காங்கிரஸுக்குள் எழுந்துள்ளது. தலைமை பதவி தொடர்பாக டி.கே.சிவக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கருத்து ஒன்றை கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இக்பால் உசேன், “டி.கே.சிவக்குமார் 200% நிச்சயமாக முதல்வராக வருவார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களுக்கு மேல் பெற்று சிவக்குமார் தலைமையில் அரசாங்கம் அமையும். இது கடவுள் மகாதேவப்பா மீது சத்தியம்” என்று கூறினார். இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான பி.ஆர் பாட்டீல், சித்தராமையா குறித்து தனது நண்பர்களிடம் தொலைப்பேசியில் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையானது. அதில் அவர் பேசியதாவது, ‘சித்தராமையா அதிர்ஷ்ட லாட்டரியில் சிக்கி முதல்வரானார். நான் தான், அவரை சோனியா காந்திக்கு அறிமுகப்படுத்தினேன். அவருடைய அதிர்ஷ்டம் நன்றாக இருந்தது, அதனால், அவருக்கு அந்த பதவி கிடைத்தது. அவரது வெற்றிக்கு சாதகமாக கிரகம் இருந்துள்ளது. ஆனால், எனது சொந்த அரசியல் பயணத்தில் இது போன்ற அதிர்ஷ்டம் இல்லை. பாருங்கள், நமக்கு ஒரு காட்பாதர் இல்லை. உண்மையில், நமக்கு கடவுளோ (God) தந்தையோ (Father) இல்லை. நான் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவைச் சந்தித்து எனக்கு தேவையான அனைத்தையும் சொன்னேன். அவர், நான் சொல்வதை பொறுமையாக கேட்டார், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று எதிர் முனையில் இருப்பவரிடம் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து எம்.எல்.ஏ பி.ஆர் பாட்டீல் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “எனது வார்த்தைகளை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் திரித்து எழுதப்பட்டு வருகிறது. இது தவறு. சித்தராமையா விஷயம் வந்த போது கே.ஆர் பேட்டையில் உள்ள எனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது முதல்வராக சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்ததாகக் கூறினேன். நான் அவரை சோனியா காந்தியைச் சந்திக்க செய்தேன் என்று சொல்வது தவறு. அவர் சோனியா காந்தியைச் சந்திக்க சென்றபோது நான் அவருடன் தான் இருந்தேன். இந்த முறை சோனியா காந்தியை சந்திக்க வேண்டாம் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். ஆனால், நான் அவருக்கு அழுத்தம் கொடுத்ததால் தான் அவரைச் சந்திக்க முடிவு செய்தார். சித்தராமையா ஒரு சிறந்த தலைவர். அவரை முதலமைச்சராக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.

நான் அவருடன் கொண்டிருக்கும் உறவை கெடுக்க வேண்டுமென்றே சில பேர் முயற்சிக்கிறார்கள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எங்களைச் சேர்ந்த 9 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸில் இணைந்தோம். மக்களிடம் இருந்து அவருக்கு கிடைத்த ஆதரவு காரணமாக காங்கிரஸ் அவரை முதல்வராக்கியது. நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக அவர் முதல்வர் ஆக்கப்படவில்லை. சித்தராமையா உடனான எனது உறவை கெடுக்க சிலர் மேற்கொண்ட முயற்சி தவறானது” என்று கூறினார். 

 

congress karnataka Leaked Siddaramaiah viral video
இதையும் படியுங்கள்
Subscribe