சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர்  காமராஜர் குறித்தும் பேசுகையில், “அப்போது எனக்கு 23, 24வது வயது இருக்கும் கலைஞர் என்னை காரில் அழைத்துக் கொண்டு செல்வார். அப்போது ஏதாவது நிகழ்வு பற்றி என்னிடம் சொல்லுவார். இதற்கு சில பேர் சொல்வார்கள், ‘என்ன சின்ன பையன் கிட்ட சொல்லிட்டு இருக்கிறார்’ என்று. ஆனால் அவருக்கு (கலைஞருக்கு) தெரியும் இதைப் பற்றி நான் கூட்டத்தில் பேசுவேன். மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்ப்பேன் என்று. அது மாதிரி நிறைய எனக்குச் சொல்லுவார்.

அதில் ஒரு நாள், ‘காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டனம் கூட்டம் போடுறாரு. காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற எல்லா பயணியர்  விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டேன். நம்மை எதிர்த்துத்தான் பேசுறாரு. ஆனால் அவருடைய உடல்நலன் கருதி நான் எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொன்னேன்’ எனக் கூறினார். அதன் பின்னர் இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு என்று கடைசியாகக் கையை பிடித்துக்கொண்டு உயிர் போறதுக்கு முன்னாடி நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்’” எனப் பேசியிருந்தார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கண்டனங்களைத் தொடர்ந்து 'உரையில் நான் கூறிய செய்தியை மேலும் விவாதப் பொருளாக்கி வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!' என திமுக எம்பி திருச்சி சிவா அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''காமராஜரை எந்த அளவிற்கு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி விட்டார்கள். திருச்சி சிவா சொல்கிறார் 'பேசுவதை விட்டு விடுங்க' என்று சொல்கிறார். பேசியது தப்பு இல்லையாம். பேசுவதை விட்டு விட வேண்டுமாம். அதேபோல் முதலமைச்சர் ஒரு தலைவரை களங்கப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லவில்லை இதில் குளிர்காய பல பேர் காத்திருக்கிறார்கள் அதனால் பேச வேண்டாமாம். இவர்களுக்கு ஓட்டுக்குதான் பயம் நாட்டுக்கு பயமில்லை.

Advertisment

காங்கிரஸ் காரர்கள் ஓட்டுக்காக இன்னும் ட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட கேவலம் எதுவும் கிடையாது. ஒரு மாபெரும் தலைவரை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல் இணையதள வாசிகள் அவர் படுத்திருந்த ஏசியை பாருங்கள், அவர் இருக்கும் பொழுது ஏசியில் தான் இருந்தார் என பதிவிடுவது வேதனையாக இருக்கிறது. இதற்கு திமுக காங்கிரஸ் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காமராஜரை பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லையா? அவருக்கு மெரினாவில் நினைவகம் வைத்தீர்களா? காமராஜர் இறந்தபோது எனக்கு தெரியும் நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு முதலமைச்சராக இருந்தவருக்கு அதுகூட செய்யவில்லை என்றால் எப்படி?  முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்வதை கூடப் பெருமையாக பேசுவீர்களா? காமராஜர் எவ்வளவு பள்ளிகளை கட்டினார்; அணைகள் கட்டினார்; இன்று இருக்கின்ற ஆவடி தொழிற்சாலை, ஐஐடி அவரால் தான் வந்தது. இதையெல்லாம் சொல்வதற்கு என்ன உங்களுக்கு'' என்று ஆவேசமாக பேசினார்.