தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென டெல்லி சென்றார். இதனையடுத்து, திமுக - காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து நேற்று கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை, “இரண்டு மூன்று மாதமாக ஒரு மிகப்பெரிய சலசலப்பு. இந்த கூட்டணி என்ன ஆகப் போகுது? எந்த திசையில் போகப்போகுது? என நிறைய பேர் குளிர் காய நினைத்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் இன்னும் ஓரிரு மணித்துளிகளில் ஒரு அறிவிப்பு வரும். எந்த காலத்திலும் இந்தியா கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/congress-2025-11-21-18-11-53.jpg)