மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இந்த சமயத்தில், தானே மாவட்டத்தின் அம்பர்நாத் நகராட்சி மன்றத்தில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள், உள்ளூர் அரசியலில் மட்டுமல்ல, மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

எதிர்ரெதிர் துருவத்தில் பயணிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த நகர மன்றத்தில் கூட்டணி அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக காங்கிரசை எதிர்த்து வந்த பாஜக தற்போது, அதிகாரத்தைப் பெறுவதற்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அம்பர்நாத்தில் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆச்சரியமான இந்த கூட்டணியில், பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை ஒன்றிணைந்துள்ளது. ‘அம்பர்நாத் விகாஸ் அகாடி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த கூட்டணி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

Advertisment

இந்தக்  கூட்டணியில் 14 பாஜக கவுன்சிலர்கள், 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள், என்சிபி (அஜித் பவார் பிரிவு) யைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஒரு சுயேச்சை மாநகராட்சி உறுப்பினர் ஆகியோர் இருந்தனர். இதனால் நகராட்சித் தலைவர் பதவிக்கான கூட்டணியின் பலம் 30க்கு மேலாக உயர்ந்துள்ளது. இது நகராட்சி மன்றத்தில் பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையை அளிக்கிறது. இந்த கூட்டணியின் ஆதரவுடன், பாஜக தலைவர் தேஜாஸ்ரீ கரஞ்சுலே அம்பர்நாத் நகராட்சி மன்றத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சமயத்தில் பாஜகவின் இந்த முடிவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணியில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை  இருந்தபோதிலும், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழ்ச்சி மூலம் ஷிண்டே பிரிவு அதிகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பிற்கிடையே, பாஜக மூத்த தலைவரும் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த கூட்டணி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்த கூட்டணியை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எந்தவொரு நிர்வாகியும், தாங்களாகவே இத்தகைய முடிவை எடுத்திருந்தால், அது ஒழுக்கத்தின் அடிப்படையில் தவறானது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபட்னாவிஸ் கூறினார். மேலும், அத்தகைய கூட்டணியை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .

Advertisment

தொடர்ந்து இந்த கூட்டணி அமைத்ததை எதிர்த்த காங்கிரஸ், அம்பர்நாத் தொகுதி காங்கிரஸ் குழுவை கலைக்க மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார், இந்த கூட்டணி என்பது உள்ளூர் தலைமையின் முற்றிலும் தவறான நடவடிக்கை என்று கூறியுள்ளது. மேலும் மாநில காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பாட்டீலுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ‘இது முற்றிலும் தவறான நடவடிக்கை மற்றும் கட்சி ஒழுக்கத்தை மீறிய செயல். இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கலின் உத்தரவின் பேரில், கூட்டணி அமைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அந்த தொகுதியில் காங்கிரஸ் செயற்குழு கலைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.