Congress files no-confidence motion notice against Lok Sabha Speaker
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர். அதனை தொடர்ந்து அவை கூடிய போது, சீன ஊடுறுவல் தொடர்பாகவும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவையும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து எரிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் தமிழக எம்பி உட்பட எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த நாளான 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பிரதமர் மோடி அன்று மக்களவைக்கு வராமல் தவிர்த்தார். இதனால், பிரதமர் உரையின்றி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி ஏன் பதிலளிக்கவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி கேட்டபோது, பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க செய்வதகாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்களான ஜோதிமணி, சுதா உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்ததாகவும், பிரதமர் மோடியை தாக்க அவர்கள் சதி செய்ததால், அவரை அவைக்கு வர வேண்டாம் தான் தான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டை முன்வைத்தார். எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு தாக்க திட்டமிட்டிருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் இன்று (10-02-26) நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று (09-02-26) எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை அளித்துள்ளனர்.
Follow Us