கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (யு.டி.எஃப்), பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், நேற்று (13-12-25) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கேரளாவின் 14 மாவட்டங்களில் உள்ள 244 மையங்களில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி கட்சியை விட, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை யு.டி.எஃப் கூட்டணி கட்சியும், தலா 1 இடத்தை எல்.டி.எஃப் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. 86 நகராட்சிகளில் யு.டி.எஃப் 54 இடங்களிலும், எல்.டி.எஃப் 28 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 152 இடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில், காங்கிரஸ் கூட்டணி 79 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 941 இடங்கள் கொண்ட கிராம ஊராட்சியில் காங்கிரஸ் கூட்டணி 504 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 341 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 14 இடங்கள் கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருப்பது ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது, “இந்த தேர்தல் முடிவுகள், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. வகுப்புவாத சக்திகளின் தீய பிரச்சாரம் மற்றும் தந்திரங்களுக்கு இரையாகாமல் இருக்க நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையை காட்டுகிறது. அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை அதிக வீரியத்துடன் தொடர வேண்டியதன் அவசியத்தையும் இந்த முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அதிகரிக்கவும், இடது ஜனநாயக முன்னணியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் உறுதியுடன் பாடுபடுவோம்” என்று கூறினார்.
45 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணி கைவசம் இருந்த தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியிருப்பது, இடதுசாரி கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/14/pinarayirahul-2025-12-14-09-26-33.jpg)