Congress Coordination Committee to meet the Chief Minister
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென டெல்லி சென்றார். இதனையடுத்து, திமுக - காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்தார். கூட்டணி தொடர்பான சர்ச்சை வெடித்த நிலையில், கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த குழுவினர் கடந்த நவம்பர் 23ஆம் தேதி முதற்கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கக்கூடிய தொகுதிகள், கூட்டணி தலைமையிடம் எவ்வளவு தொகுதிகளை கேட்பதி, எந்தெந்த தொகுதிகளை கேட்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஒரு விருப்பப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு நாளை மறுநாள் (03-12-25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது சட்டமன்றத் தேர்தல் குறித்தும், திமுக தலைமையிடம் காங்கிரஸின் விருப்ப தொகுதிகள் தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow Us