தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (05.03.2026) கடைசி நாள் என்பதால், காங்கிரஸ் மேலிடம் இன்று காலை அவரது பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது செல்வப்பெருந்தகை, ஜவாஹிருதுல்லா எனப் பலரும் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜன் கார்கேவின் ஆசீர்வாதத்துடன், சோனியா காந்தியின் ஆசியுடன் ராகுல் காந்தியால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவன் நான்.
தமிழகத்திலே செல்வப்பெருந்தகை மூலமாகவும், கிரீஷ் சோஷாடங்கர் மூலமாகவும் ஒரு எளிய கட்சி பணியாளனாக என்னை அடையாளப்படுத்தி இந்த மாபெரும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். பெரிய அளவில் அறிமுகம் இல்லை என்றாலும் என்னுடைய பணியால் கண்டிப்பாக தமிழக மக்களுக்கு நான் சரியாக அறிமுகப்படுத்தப்படுவேன். நான் கண்டிப்பாக தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை கண்டிப்பாக ஆற்றுவேன் என்று கூறிக்கொண்டு மீண்டும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நம் நாட்டின் தலித் தலைவர்களுடன் பணியாற்றினேன். நான் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவன்.
எனவே எனது கவனம் விளிம்புநிலை பிரிவினர், குறிப்பாக பெண்கள் மற்றும் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பு சமூகங்களின் பிரச்சினைகள் மீது இருக்கும்” எனத் தெரிவித்தார். திருச்சியைச் சேர்ந்த இவர், கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது மணிப்பூர், நாகாலாந்து மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இவர், அடிமட்டத் தொண்டராக இருந்து கட்சிப் பணிகளால் படிப்படியாக உயர்ந்தவர். சுமார் 49 வயதான இவர், இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/christoper-thilak-2026-03-05-15-19-12.jpg)
அதோடு கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த கிறிஸ்டோபர் திலக்கை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. போட்டி இருப்பின் தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தேமுதிக வேட்பாளார் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/rs-mp-thilak-2026-03-05-15-17-22.jpg)