மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமத்துவ நடைப்பயணம் என்ற பெயரில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை துவங்க இருக்கிறது.

Advertisment

இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரவுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை திடல் வரை சாலைமார்க்கமாக பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நடைப்பயணம் துவக்க விழாவில் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மதிமுக சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த அழைப்பிதழை செல்வப்பெருந்தகையிடம் நேரடியாக கொடுத்தபோது மதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த அழைப்பிதழில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த விழாவில் பங்கேற்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று நடைபெறும் சமத்துவ நடைப்பயணம் தொடக்க விழாவில் காங்கிரஸ் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.