Congress accuse CISF soldiers blocking opposition members in parliament
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளில் வலியுறுத்தி வருகின்றனர். இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பேசினர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10வது நாள் இன்று (01-08-25) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும், பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் மக்கள் பிரச்சனை குறித்து முழக்கமிடும் போது துணை ராணுவப் படையான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுத்து நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, சிஐஎஸ்எஃப் (CISF) பணியாளர்கள் அவைக்குள் ஓடி வந்து தடுக்கும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதை நேற்றும் இன்றும் பார்த்தோம். நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இது மிகவும் ஆட்சேபனைக்குரியது, இதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். எதிர்காலத்தில் உறுப்பினர்கள் பொதுமக்களின் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பும்போது, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அவைக்குள் வரமாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “மாநிலங்களவையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் போது தடுக்கப்படவில்லை என சிஐஎஸ்எஃப் (CISF) ஆல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் யாராவது மாநிலங்களவையில் நியமிக்கப்பட்ட எல்லையைத் தாண்டினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு நபர்கள் மக்களவைக்குள் குதித்து வண்ணப் புகையை தூவி கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக சிஐஎஸ்எஃப்-பிடம் அரசாங்கம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.