மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி முதன் முறையாக இன்று (13.09.2025) மணிப்பூருக்கு பயனம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மணிப்பூர் மக்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து சுராசந்த்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணிப்பூரின் குழந்தைகள் பலர் (பாதுகாப்புப்படை வீரர்கள்) இந்தியத் தாயைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் சக்தியை (பலம்) உலகம் கண்டது.
நமது வீரர்கள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் பீதியடையத் தொடங்கியது. இந்தியாவின் இந்த வெற்றியில் மணிப்பூரின் பல துணிச்சலான மகன்கள் மற்றும் மகள்களின் வீரமும் அடங்கும். அதேபோல், நமது துணிச்சலான தியாகி தீபக் சிங்ககாமின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அவர் செய்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். மணிப்பூரி கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமையடையாது என்று நான் கூறியிருந்தேன். மணிப்பூரின் விளையாட்டு வீரர்கள் இல்லாமல், இந்தியாவின் விளையாட்டுகளும் முழுமையடையாது. மணிப்பூரின் இளைஞர்கள் மூவர்ணக் கொடியின் பெருமைக்காக தனது முழு மனதையும் ஆன்மாவையும் அர்ப்பணிக்கும் இளைஞர்கள்.
மணிப்பூர் மண்ணிலிருந்து, நேபாளத்தில் உள்ள எனது சகாக்களுடன் பேசுவேன். நேபாளம் இந்தியாவின் நண்பன். அதுவும் நெருங்கிய நண்பன். நாம் பகிரப்பட்ட வரலாறு, நம்பிக்கை ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளோம். மேலும் ஒன்றாக முன்னேறிச் செல்கிறோம். நேபாளத்தில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சுசீலாவுக்கு நாட்டு மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அவர் வழி வகுப்பார் என்று நான் நம்புகிறேன். நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா பதவியேற்றது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இத்தகைய நிலையற்ற சூழலிலும் ஜனநாயக விழுமியங்களை உச்சத்தில் வைத்திருக்கும் நேபாளத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுவேன். கடந்த சில நாட்களாக, நேபாள இளைஞர்களும் பெண்களும் நேபாள சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்ட கடுமையாக உழைப்பதைக் காணலாம். நான் அவர்களின் படங்களை சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்கிறேன். அவர்களின் நேர்மறையான சிந்தனையும் நேர்மறையான செயல்களும் ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், நேபாளத்தின் புதிய எழுச்சியின் தெளிவான அறிகுறியாகவும் உள்ளன. நேபாளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.