SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பீகாரையடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் என தலைவர் மு.க.ஸ்டாலின்,முதலிலிருந்தே கூறி வந்தார்.
இந்த எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்து, இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை செய்து, பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்து, அதன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஐஆர் பணிகள் துவங்கிய நிலையில் அதில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. பெரும்பாலான இடங்களில், பிஎல்ஓக்கள் என அழைக்கப்படும் அதிகாரிகள் நேற்று எந்த இடத்திற்கும் வந்து கணக்கீடு படிவங்களைத் தரவில்லை. அதிகாரிகளை விசாரித்தால், தங்களுக்கு படிவங்கள் வந்து சேரவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். 30 நாட்களில் ஒரு நாள் படிவங்கள் வழங்கப்படாமலே போய்விட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு தொகுதிகளில் பிஎல்ஓக்கள் படிவங்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துத்தர வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் 27/10/25 அறிவிப்பின்படி, கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து மீண்டும் பெறுவதற்கு ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மறுநாளே படிவங்களைத் திருப்பித் தரக் கேட்பது சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல.
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர்க்காக தேர்ந்தெடுத்த காலம் மிகவும் உசிதமற்றது, நடைமுறைக்கு ஒவ்வாததாக அமைந்துள்ளது; நவம்பர் 4-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 4-ஆம் தேதி வரை படிவங்களை கொடுத்து திரும்ப வாங்கக்கூடிய காலத்தில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும். அத்துடன் இது நெல் அறுவடை காலமும் ஆகும்.
விவசாயிகள் நிலத்தில் இருக்க வேண்டிய காலத்தில் இந்தப் பணி மிகுந்த சிரமத்துக்குள்ளான காலம். மேலும், பிப்ரவரி 2026 வரை நடக்கவிருக்கும் இந்தப் பணிகளுக்கு இடையில் கிறிஸ்மஸ்,பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை , இக்காலங்களில் ஊழியர்களாக இருக்கட்டும் வாக்காளர்களாக இருக்கட்டும், களத்தில் இருந்து பணிகளைச் செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் அறிந்திருக்க வேண்டும்
ஏற்கனவே பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும் கூட, ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் நீக்கி, குளறுபடியான வாக்காளர் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 33 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.
கடந்த 24/06/2025 அன்றைய பீகாருக்கான அறிவிப்பை விட, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் மோசமானதாக இருப்பதால் தான் திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. பீகாரில் கணக்கீடு படிவத்தோடு சேர்த்து ஆவணங்களைத் தர வேண்டும், ஆனால் தமிழ்நாட்டில் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். படிவத்தைப் பூர்த்தி செய்து தரவில்லை என்றால், 30 ஆவது நாள் முடிந்த பிறகு அவர்கள் வாக்காளராக இருக்க மாட்டார்கள், புதிதாக படிவம் 6-இல் (Form 6) வாக்காளராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையின் கீழ், ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைக் கொண்டு, அந்த விவரங்களைக் கணக்கீட்டுப் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். 2002-க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாகஆகிவிட்டது.
2002/2005 பட்டியல்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பெறுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இந்த பழைய வாக்காளர் பட்டியல்கள் முழுமையான விவரங்களைத் தாங்கியதாக இல்லை. வீதியின் பெயர், பாகத்தின் பெயர் தெளிவாக இல்லை, வாக்காளர் பெயர் மட்டுமே பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே பெயரில் பல வாக்காளர்கள் இருக்க வாய்ப்புள்ளதால், ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய வாக்கை அடையாளம் காணவும், கணக்கீடு படிவத்தைப் பூர்த்தி செய்யவும், கணினியைப் பற்றி தெரிந்திருந்தால்கூட, அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவழிக்க நேரிடும். சரியான விவரங்களைப் பூர்த்தி செய்யாவிட்டால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் வராது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில் விதி மீறல்களும் சட்ட மீறல்களும் இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் "என்று என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.மேலும், அடையாள ஆவணங்கள் குறித்த 13வது விதி குறித்தும் அவர் அதிர்ச்சி தெரிவித்தார்.
"பீகாரில் நடந்த எஸ்ஐஆருக்குப் பிறகு வெளியிடப்பட்ட 1/7/2025 தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அதை ஒரு அடையாள ஆவணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் அல்லது 12 மாநிலங்களில் வாக்காளர் ஆகலாம் என்று கூறியிருப்பது பெரிய குழப்பத்தை விளைவிக்கும்.
ஒருவர் ஒரு இடத்தில் 'சாதாரணமாக குடியிருப்பவராக' இருந்தால் மட்டுமே அவருக்கு வாக்குரிமை கிடைக்கும் என்று சட்டம் கூறுகிறது. ஒரு மனிதர் ஜூலை 1, 2025 அன்று பீகாரின் சாதாரணமாக குடியிருப்பவர் என்று தேர்தல் ஆணையம் சொல்லிய பிறகு, நான்கைந்து மாதங்களில் அவர் வேறு மாநிலத்தில் எப்படி வாக்காளர் ஆக முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்ப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்த எஸ்ஐஆரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைத்து, பிஎல்ஏ 2 க்களுக்கு உரிய பயிற்சியை நாங்கள் கட்சி சார்பாகச் செய்திருக்கிறோம்.தலைவர் அறிவுறுத்தலின் பேரில், வாக்காளர்களின் வாக்குகளைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காகத் தலைமை கழகத்தில் எட்டு வழக்கறிஞர்களையும், விளையாட்டு அணியைச் சேர்ந்த கௌதமன் அவர்களையும், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ஒருவரையும் நியமித்து ஒரு அணியைத் துவங்கி இருக்கிறோம்"என்றார்.
திமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், "எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என்பதே எங்களுடைய கோரிக்கை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அதிமுக ஆதரிக்கத்தான் செய்வார்கள்"என்றார் அவர்.
Follow Us