கிருஷ்ணகிரியில் நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினரிடையே கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றதாக விசிக நிர்வாகியை கிராம மக்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்துள்ள சவுக்குகோட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் சரவணன்-செல்வி தம்பதி. இவர்களுக்கு ஹரி காந்த் ஸ்ரீகாந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்மையில் சரவணன் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். சரவணன் உயிருடன் இருந்தபோது தன்னுடைய நிலத்திற்கு ஒட்டிய பகுதியில் உள்ள ராஜகோபால் என்பவரிடம் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வீடு கட்டுவதற்காக செல்வி அந்த இடத்தில் அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த ராஜகோபால் ''இங்கே எப்படி வீடு கட்ட முடியும்?" என கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கடப்பாரை கொண்டு வீடு கட்டுவதற்காக கட்டப்பட்ட அஸ்திவாரத்தை இடித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து செல்வி தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த நிலப் பிரச்சனையில் முடிவு கட்டப்படாத நிலையிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி ராஜகோபால் தரப்பினர் மீண்டும் வீடு கட்டுவதற்காக போடப்பட்ட அஸ்திவாரத்தை சேதப்படுத்த முயன்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் செல்வியின் மகனான ஹரிகாந்த், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பைக்கினுடைய பம்பர் பகுதியை எடுத்து ராஜகோபால் தரப்பை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ராஜகோபால் தரப்பும் செல்வியை தாக்கியுள்ளனர். இதில் இரு தரப்பிலும் காயமடைந்து கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் புலி என்ற ராஜேஷ் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் பைக்கில் வந்து அந்த பகுதியில் சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வந்த ராஜேஷை சிறைபிடித்து நிலப்பிரச்சனையை ஏன் சாதி பிரச்சனையாக மாற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.