ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி 9ஆம் தேதி இந்தியா வந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த 10ஆம் தேதி விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதாகவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற மாவட்டத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டன. அதே சமயம் பாகிஸ்தானின் 25க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனிடையே, ராணுவ மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் அறிவிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், இரு நாடுகளிக்கிடையே எல்லை வழியே நடைபெறும் பரஸ்பர வணிகத்துக்கான எல்லை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் காயமும் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஸ்பின் போல்டாக் பகுதியில் குறைந்தது 40 தாலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் வேண்டுகோள்களுக்கு பிறகு கடந்த 12ஆம் தேதி சிறிது நேரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் அதிகரித்துள்ளது.