திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது பெருமாள்கோவில்பட்டி. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவ வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பெருமாள்கோவில்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கற்களை கிறிஸ்தவ வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதனைத் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது.

காளியம்மன் கோவில் முன்புள்ள இடம் தொடர்பான பிரச்சினை, பல ஆண்டுகளாக இந்து மற்றும் கிறிஸ்தவ வன்னியர் சமூகங்களிடையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது, காவல்துறையினர் முன்னிலையில், இந்து வன்னியர் மக்கள், கிறிஸ்தவ வன்னியர் மக்களைக் கட்டைகளால் தாக்கியும், கற்களை வீசித் தாக்கியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், முத்துராஜ் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.