கோவில்பட்டி தாசில்தாராக 2025 ஜூன் 4 அன்று பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். வாரிசு அடிப்படையில் டைப்பிஸ்டாக வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்த இவர், கழுகுமலையில் வருவாய் ஆய்வாளராகவும், எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுக்காக்களில் மண்டல துணை தாசில்தாராகவும், கோவில்பட்டி தாலுக்கா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியாற்றினார்.

Advertisment

இந்தக் காலகட்டங்களில், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவது, மந்தமாகச் செயல்படுவது, பொதுமக்களிடம் விவரங்கள் கேட்கும்போது அதிகார ஆணவத்துடன் பேசுவது, சக ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.  இந்நிலையில், எட்டையாபுரம் தாலுக்காவில் வேம்பூர் சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக இருந்த பாலசுப்பிரமணியம் பணி மாற்றம் செய்யப்பட்டு கோவில்பட்டி தாசில்தாராக உத்தரவு வெளியானது. இதற்கு சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட வனஜா என்ற பெண் தனது பிள்ளைக்கு சாதி சான்றிதல் வந்தபோது தாசில்தார் பாலசுப்பிரமணி, “கலப்புத் திருமணம் செய்து இருக்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லையா? அதுவும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்திருக்கிறாய். உன் கணவர் சாதியில் குழந்தைகளுக்கு சான்றிதழ் தரமாட்டேன். வேண்டுமென்றால், உன் சாதியில் சான்றிதழ் தருகிறேன்” என அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.  இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாலசுப்பிரமணியத்தைக் கண்டித்து  வனஜா தனது கணவரோடு சப்-கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “வருவாய்த் துறையே... சர்வேயர்களிடம் மாதம் ரூ.5 லட்சம் கப்பம் கேட்கும் கோவில்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடு” என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசன் கூறுகையில், தமிழக அரசின் சமீபத்திய வழிகாட்டுதல் உத்தரவின்படி, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, இணைய வழி பட்டா, பட்டாவில் பெயர் திருத்தம், பரப்பளவு திருத்தம் என கோவில்பட்டி தாலுக்காவில் மாதந்தோறும் குறைந்தபட்சம் 80 பட்டாக்கள் வரை ஒவ்வொரு சர்வேயரும் பணிகளை முடித்து தாசில்தார் ஒப்புதலுக்கு அனுப்புகின்றனர். கோவில்பட்டி தாலுக்காவில் 11 சர்வேயர்கள் உள்ளனர். சராசரியாக ஒவ்வொரு சர்வேயரும் 50 முதல் 60 பட்டாக்கள் வரை என மாதந்தோறும் 500 முதல் 600 பட்டாக்கள் வரை தாசில்தார் ஒப்புதலுக்கு அனுப்புகின்றனர். இவர்களிடம் ஒரு பட்டாவுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், 500 பட்டாக்களுக்கு மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் தர வேண்டும். அப்போதுதான் அந்தப் பட்டாக்களுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கப்படும் என கறாராக வசூலில் ஈடுபடுகிறார். 

பணம் தர மறுக்கும் சர்வேயர்களின் மூலம் வரப்படும் பட்டாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு விடுகிறார். பணம் இருந்தால் மட்டுமே கோப்பு நகர்கிறது. இதனால் சாதாரண மக்கள் பட்டா பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அரசின் திட்டங்கள் எந்தவித தடையுமின்றி மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. கோவில்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணியம் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லை. மக்களை அலைக்கழிக்கும், அவமதிக்கும் தாசில்தார் பாலசுப்பிரமணியத்தின் அராஜக ஆணவப் போக்கையும், லஞ்சம், ஊழலை கண்டித்தும் வரும் 18 ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி தாலுக்கா அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டமும், அதைத் தொடர்ந்து தொடர் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

தாசில்தார் பாலசுப்பிரமணியத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சப்-கலெக்டர் அலுவலக வாசல் முதல் ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி