மதுரை மாநகர ஆணையாளரிடம் மாநாட்டை நடத்தியவர்கள் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வர் ஆகியோர் மீது வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா திமுக புகழேந்தி நேரில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “மதுரையில் சென்ற மாதம் 22ஆம் தேதி முருகன் மாநாட்டை இந்து முன்னணி நடத்தியது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரை சென்று, பல நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த உத்தரவு வாங்கியது இந்து முன்னணி. அதே நேரத்தில் மாநாட்டை நடத்துபவர்கள் மதம், பிற கட்சியின் தலைவர்களைப் பற்றிய எந்த விமர்சனங்களும் இல்லாமல் மாநாட்டை நடத்துவதாக கொடுத்த உறுதிமொழியை கடைப்பிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதற்கு எதிர்ப்பாக மறைந்த இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் பேசிய பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில் இந்துக்கள் கிறிஸ்தவர்களாக, இஸ்லாமியர்களாக மதம் மாறியதற்கு பணம் பெற்றுள்ளதாகவும் தைரியம் இல்லாத இந்துக்கள் என்றும் அவர் பேசியது இடம்பெற்று இருந்தது. மேலும் திராவிட இயக்கத்தினுடைய தலைவர்கள் பெரியார், அண்ணா ஆகியோரையும், திராவிடம் சம்பந்தமாகவும் இழிவாக பேசிய தொகுப்புரை இடம் பெற்றிருந்தது.

Advertisment

தமிழக மக்களின் தமிழ்கடவுளாக விளங்கும் முருகன் பெயரால் நடத்தப்பட்ட மாநாட்டில் இதுபோன்ற தவறான வார்த்தைகளை பயன்படுத்தி தலைவர்களை அவமானப்படுத்தி உள்ளார்கள். ஆகவே இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகும் தந்தை பெரியாரையும் அண்ணாவையும் மதத்தையும் இழிவுபடுத்தி பேசும் பொழுது இதனை முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மேலும் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் இவர்கள் எடுத்திருக்கும் சத்திய பிரமாணத்திற்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் இது அமைந்துள்ளது.  ஆகவே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், அவதூறாக பேசியவர்கள் மேலும் வழக்கு மன்ற ஆணையை புறக்கணித்துள்ள இவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மனுவை மதுரை மாநகர ஆணையர் டாக்டர் லோகநாதனிடம்  புகழேந்தி அளித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என காவல்துறை முயன்று வருவதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று நினைக்கிறேன். பேசுவதும் எழுதுவதும் ஒரு அமைப்பின் உரிமை. அங்கே கொடி தான் அவர்களது அடையாளம். இது டாக்டர் அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவரது கட்சி கொடியை எடுத்ததற்காக போராடினார், இப்பொழுது இது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வழக்கறிஞர் திருமூர்த்தி வாதாடி வருகிறார்கள். பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னர் மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டு இருக்கிறது” என பேசினார் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தியுடன், கஜேந்திரன், வழக்கறிஞர் கருணாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்