Compensation of Rs. 262 crore for Indian student who lost in america
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி ஜானவி கண்டுலா. இவர் அமெரிக்காவின் துறைமுக நகரமான சியாட்டில் அருகே சவுத் லேக் யூனியன் பகுதியில் உள்ள, நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் படிப்பு முடிய இருந்த நிலையில், அந்த ஆண்டின் ஜனவரி மாதம் 23 தேதி அன்று இரவு நேரத்தில், சாலையைக் கடக்கும் போது அவர் மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவர் 100 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார். பின்னர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காவல்துறையினரின் உடையில் பொருத்தப்பட்ட கேமராக்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இதில், விபத்து காட்சிகள் பதிவாகியிருந்த நிலையில், காவலர்கள் விபத்திற்குள்ளான மாணவியைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியதும் தெரியவந்தது. இந்த தகவல்கள் வெளியான நிலையில், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து இந்தியத் தூதரக அதிகாரிகளும், இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வந்தனர்.
பின்னர், ரோந்து வாகனத்திலிருந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். வாகனத்தை ஒட்டிய ஓட்டுநரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இத்துடன், அவருக்கு 5000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் கடந்த 2024 ம் ஆண்டு 110 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டுக் காவல் அதிகாரி மற்றும் நகர நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சியாட்டில் நகர அதிகாரிகள் மாணவி ஜானவி கண்டுலாவின் குடும்பத்திற்கு ரூ.262 கோடிகள் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பீடு தொகை மூலமாக இந்த இழப்பீடு தொகை வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow Us