காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் நிலுவையில் உள்ளது. 2010ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் கடன் தமிழகத்தை விட  இரு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது, ​​உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் வட்டிச் சுமை (%) 3வது இடத்தில் அதிகமாக உள்ளது. கோவிட்க்கு முந்தைய அளவை விட தமிழ்நாட்டின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா  வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது. இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு

Advertisment

மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது. நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை” எனக் குறிப்பிட்டுள்ளார்.