இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடு சேலத்தில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வில் புதிய மாநிலச் செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வது என இருந்தது. அதனடிப்படையில் மாநாட்டின் இறுதி நாளான இன்று காலை மாநிலக் குழு தேர்வு நடைபெற்றது. 101 பேர் மாநிலக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு மாநில நிர்வாக குழுவும், மாநிலச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் தேர்வும் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் மாநில நிர்வாகக் குழு தேர்வு நடைபெறும் பொழுது மாநிலச் செயலாளர் நிர்வாகக் குழு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். அந்த மாநில நிர்வாகக் குழுவில் பணியாற்றக்கூடிய   தொண்டர்களுக்கு உள்ளேயே  யாரை நிர்வாகக் குழு உறுப்பினராக சேர்ப்பது என்ற போட்டா போட்டி ஏற்பட்டது. தற்போதுள்ள மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஒரு அணியாகவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அணியினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டனர். இதில் மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளரை தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். மாநிலச் செயலாளரை தேர்ந்தெடுத்த பிறகு, மாநில நிர்வாகக் குழுவில் அதை வைத்து அங்கீகாரம் பெறும் எனப் பேசப்பட்டது.

இந்நிலையில் மாநில நிர்வாகக் குழு தேர்வு தான் முதலில் நடத்தப்பட வேண்டும். அந்த நிர்வாக குழு தான் மாநிலச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் என் முத்தரசன் அணியினர் வலுவாக வாதிட்டனர். மாநாட்டின் இறுதி நாளான இன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற இருந்ததால் மாலை 4 மணிக்கு மேல் விவாதங்களை நடத்தி அதன் பிறகு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்து அதன் பிறகு மாநிலச் செயலாளரை தேர்வு செய்வது என்பது முடியாத காரியம் என்பதால் மாநிலச் செயலாளர் தேர்வு மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Advertisment

இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.