Commemoration of Cyclone Gaja, which destroyed millions of trees and wreaked havoc
2018 நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் தாக்கப் போகிறது என்று அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தனியார் ஆய்வாளர்களும் எச்சரிக்கை கொடுத்தனர். சொன்னபடியே 15 ந் தேதி நள்ளிரவுக்குப் பிறகு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. உப்புக் காற்று புதுக்கோட்டை மாவட்டம் வரை உணர முடிந்தது. 16 ந் தேதி அதிகாலை மதம் கொண்ட பல ஆயிரம் யானைகள் வருவது போல வெளிப்பட்ட காற்று தென்னை, மா, பல என கோடிக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது. 100 முதல் 500 ஆண்டுகள் பழமையான ஆலமரங்கள், அரச மரங்கள், புளியமரங்கள் கூட சாய்ந்து கிடந்தது.
புயல் வரும் என்பார்கள் வராது என்று சற்று சாதாரணமாக இருந்தனர் மக்கள். நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்து. 16 ந் தேதி விடியும் போது மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மரங்கள் சாய்ந்து கிடந்தது. ஏராளமான வீடுகளின் மேல் மரங்கள் கிடந்தது. சாலைகள் ஒடிந்து கிடந்த மரங்களால் மூடப்பட்டிருந்தது. குடிசைகள் மேல் மரங்கள் விழுந்து பலரது உயிர்கள் பரிபோய் இருந்தது. ஆடு,மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் ஆங்காங்கே உயிரிழந்து கிடந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/16/gaja1-2025-11-16-18-12-38.jpg)
இவற்றை எல்லாம் பார்வையிட அதிகாரிகளால் ஊர்களுக்குள் வர முடியவில்லை. பொதுமக்களுக்கும் பொருட்கள் வாங்க வெளியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. உள்ளூர் இளைஞர்கள் சாலைகளில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றி பாதைகளை சரி செய்தனர். நாட்டுக்கே சோறு போட்ட விவசாய மக்களுக்கு குடிக்க தண்ணீர் உணவு கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை. இருளில் மூழ்கியது கிராமங்கள். ஒரு குடம் குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் நின்று பிடித்துச் சென்றனர்.
தங்களை வாழவைத்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து கிடப்பதைப் பார்த்து பெண்கள், விவசாயிகள் கதறித் துடித்தனர். பல ஆயிரம் குடிசைகள் கிழிந்து தொங்கியது. குடியிருக்கு வழியின்றி முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்கள் ஆனது. தோட்டங்களில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்ற மேலும் பல மாதங்கள் ஆனது. குடிசைகளை சீரமைக்க வழியின்றி பிளாஸ்டிக் சீட்டுகளை மூடி வைத்தனர். இன்னும் இந்த குடிசையில் பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். கஜா புயலின் கோர தாண்டவம் ஆடி 7 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து மக்கள் வெளிவர முடியாமல் தான் உள்ளனர்.
Follow Us