விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் மாரீஸ்வரன் (வயது 21). இவர் திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். மண்டையூரில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் பழக்கமாகி அடிக்கடி குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து மாணவன் மாரீஸ்வரனை அரியமங்கலம் வரச் சொல்லி அவரிடம் பணம் வாங்கியதுடன் பாலியலுக்கும் பயன்படுத்தி படங்கள், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி அழைத்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததுடன் பணம் வாங்கியுள்ளனர்.
இளங்கோவன் அழைத்த நேரத்திற்கு செல்லவில்லை என்றால் பாலியல் படங்களை பகிர்ந்து விடுவதாக மிரட்டியே அடிக்கடி அழைத்து தொந்தரவு கொடுத்தவர்கள் நேற்றும் (20.09.2025) அரியமங்கலம் அழைத்து இளங்கோவன் மற்றும் அவரது நண்பர் 5 பேரும் படம், வீடியோக்களை காட்டி மிரட்டி ரூ.5000 பணம் பறித்துக் கொண்டு தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன் தங்கும் இடத்திற்கு வந்து ஒரு நோட்டில் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதோடு தொல்லை கொடுத்தவர்களைப் பற்றிய விபரங்களையும், என்ன மாதிரியான தொல்லை கொடுத்தனர் என்பதையும் நீண்ட கடிதம் எழுதி அடியில் கையெழுத்து மற்றும் கைரேகை வைத்து அங்க அடையாளங்களையும், அரிமங்கலம் போய் வந்த பஸ் பயணச்சீட்டுகயைும் தனது செல்போன் பாஸ்வோர்டையும் எழுதி அதனை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விட்டு மண்டையூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவன் மாரீஸ்வரன் இறப்பையடுத்து அவர் வெளியிட்ட ஆதாரங்களும் வெளியாகி உள்ளது. இதனையடுத்து திருச்சி ரயில்வே போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.