வேலூர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பத்தியவரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் டேனி வளவனரசு (வயது 19). இவர் வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியில் பிஏ டிஃபென்ஸ் (BA defence) 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் 3வது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

Advertisment

அவருடன் ஆரணி இந்திரா நகர், தொந்திகரம் பட்டுவைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), பாண்டிச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி (19), தர்மபுரியைட் சேர்ந்த இன்பவர்மா (18) ஆகியோர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 25-ந் தேதி தர்மபுரியை சேர்ந்த இன்பவர்மா தனது சொந்த ஊருக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து டேனி வளவனரசு, கிஷோர் கண்ணனும் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

Advertisment

பின்னர் கடந்த 1-ந் தேதி வேலூருக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு நண்பர்கள் தங்கியிருந்த அறையில் டேனி வளவனரசு கொலை செய்யப்பட்டார். பின்னர் டேனி வளவனரசு உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணன் பைக்கில் வைத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள சித்தப்பாறை கிராம மலையடிவாரத்தில் கொண்டுச்சென்று வீசிவிட்டு வந்துள்ளனர். இதனிடையே டேனி வளவனரசுவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டனர். அவரை தொடர்பு கொள்ள முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் போலீசில் புகார் செய்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் டேனி வளவனரசுவை தேடி வந்தனர்.  அவரது நண்பர் கிஷோர் கண்ணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பார்த்தசாரதி தான் டேனி வளவனரசுவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக தெரியவந்தது. அவரைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

Advertisment

இதுக்குறித்து போலீசார் கூறுகையில், ‘பார்த்தசாரதி தான் டேனி வளவனரசு கொலை செய்ததாக கிஷோர் கண்ணன் தெரிவித்துள்ளார்.  அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருகிறார். பார்த்த சாரதியை பிடித்த பின்னர் தான் டேனி வளவனரசுவை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவரும். டேனி வளவனை இரும்புராடால் சரமாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்தவர்கள் அவனது உடலை பைக்கில் உட்காரவைத்து, போதையில் இருப்பதுப்போல் காட்டி ஆந்திரா மாநில எல்லைக்கு கொண்டு சென்று வீசிவிட்டு வந்ததை விசாரணையில் தெரிவித்துள்ளனர்’ என்று கூறினர்.

தங்கள் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியை யார் தங்கள் வலையில் வீழ்த்துவது என்கிற போட்டியில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அது உண்மையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.