திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்தவர் இளம்பெண் ரூபிலா. இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி கல்வி கற்று வந்தார். இந்நிலையில், ஜூலை 18 ஆம் தேதி, கல்லூரிக்குச் செல்லாமல் விடுதியில் இருந்த ரூபிலா, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல் நிலைய போலீசார், மாணவி ரூபிலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர்,  ஜூலை 19 ஆம் தேதி ரூபிலாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனிடையே, மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையைத் தொடங்கினர்.

மாணவியின் படிப்பில் ஏதேனும் பிரச்சனையா?, பேராசிரியர்கள் திட்டியதால் ஏற்பட்ட விளைவா?, அல்லது காதல் தோல்வி காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தினர். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர், “எங்கள் மகள் ரூபிலாவை ஒரு இளைஞர் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். இதை அறிந்து எனது மகன் அந்த இளைஞரை தொலைபேசியில் அழைத்து கண்டித்தார். ஆனாலும், அந்த இளைஞர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று (ஜூலை 18) அந்த இளைஞர் மீண்டும் தொந்தரவு செய்ததால், எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார். அந்த இளைஞரே எங்கள் மகளின் மரணத்திற்கு காரணம்” என்று கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த இளைஞருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் மாணவியின் அண்ணன் தெரிவித்திருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் ரூபிலாவின் உடலை வாங்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். தற்போது விடுதி அறையைக் காலி செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேசினால், பதிலளிக்க மறுக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

மாணவியின் பெற்றோர் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி, மாணவிக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறையினருக்கும் அரசுக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.