புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பெருநாவலூர் கிராமத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இதில் முதலாமாண்டு படித்த மாணவர்கள் அறந்தாங்கி எழில் நகர் சுரேஷ்பாபு, கடையாத்துப்பட்டி சௌந்தராஜன், குரும்பூர் மேடு பிரகாஷ் ஆகியோர் ஆவர். இவர்கள் மூவரும் கடந்த 21ஆம் தேதி கல்லூரியில் இருந்து அறந்தாங்கி நோக்கி ஒரு பைக்கில் அதிவேகமாக சென்று நாணாகுடி கிராமத்தில் வளைவில் திரும்பும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பைக் ஓட்டிய மாணவர் சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் வாகன விபத்தில் இறந்த மாணவர் சுரேஷ்பாபுவுக்கு இன்று கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்தது. இதில் பலரும் கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் இதே கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்த கண்ணறியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மதி மகன் சுதர்சன் (வயது19) கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு பைக்கில் சொந்த ஊர் நோக்கி சென்றனர். அப்போது, புண்ணியவயல் கிராமத்தில் பழந்தாமரை பிரிவு சாலை அருகே சென்ற போது முன்னால் சென்ற டிராக்டர் சாலை ஓரமாக ஒதுங்கும் போது பின்னால் சென்ற சுதர்சன் தனக்கு தான் வழிவிடுகிறார் என்று நினைத்து டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதி தூக்கி வீசியதில் பின்னால் வந்த டிராக்டர் பலமாக மோதியதால் மாணவர் சுதர்சன பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் பரவியதும் சக மாணவர்கள் உறவினர்கள் கதறி அழுதனர். ஒரே கல்லூரி மாணவர்கள் சில நாட்களில் அடுத்தடுத்து வாகன விபத்தில் பலியாகும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இளங்கன்று பயமறியாது என்பது போல பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் அழுது மிரட்டியே விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி அதி வேகமாக ஓட்டுகின்றனர். விலை உயர்ந்த அதிவேக பைக்குகள் செல்லும் அளவில் கிராமச் சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதை வாகனம் ஓட்டும் போது இவர்கள் அறிவதில்லை.
வாகனத்தின் அதிவேகம் எவ்வளவோ அந்த வேகத்தில் செல்கிறாரர்கள். ஆனால் சிறார்கள் என்பதால் ஓட்டுநர் உரிமம் பெற முடிவதில்லை. இதனால் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் இளைஞர்கள், மாணணவர்கள் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது வேதனையாக உள்ளது. ஆகவே முதலில் மாணவர்களுக்கு சாலைவிதிகள், வாகனம் ஓட்டும் முறைகளை பெற்றோர்கள், போலிசார், கல்லூரி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி வாகன சோதனைகள் செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.