முதலை கடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பெரிய வேடியனூர் கோவில் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் முனிஸ்வரன் ஆவார். கல்லூரி மாணவரான முனிஸ்வரன் சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிக்குக் கால்நடைகளை இன்று (14.09.2025) மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் அருகில் உள்ள ஆற்றில் கை, கால் மற்றும் முகத்தைக் கழுவ ஆற்றில் இறங்கியுள்ளார்.
அச்சமயத்தில் ஆற்றில் இருந்த முதலை ஒன்று எதிர்பாராத விதமாக முனியைப் பலமாகக் கடித்துத் தாக்கியது. இதில் முனி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு முனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.