திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் அஸ்வந்த்(17). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இன்று (24/08/2025) உறவினர் ஒருவரின் விழாவில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் வந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக அஸ்வந்த் சென்றுள்ளார்.
திடீரென ஆற்றில் ஏற்பட்ட நீர்ச்சுழலில் அஸ்வந்த் சிக்கிக்கொண்டார். உடனிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போக என்ன செய்வதென்று தெரியாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியை நாடியுள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மற்றும் மீட்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி அஸ்வந்த் உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.