Advertisment

‘குறுக்கக் குறுக்க வந்த அவ்வளவுதான்...’ - கல்லூரி மாணவரின் அடாவடி; பேராசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

2

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சந்தனமாரி பொறுப்பு முதல்வராக உள்ளார். 2022 - 2025 கல்வியாண்டில் பி.எஸ்.சி. ஜியாலஜி பயின்று, ஆறாவது செமஸ்டர் எழுதாமல் இடைநிற்கப்பட்ட மாணவர் மனோஜ், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

Advertisment

அப்போது, ‘ஐந்தாவது செமஸ்டரின்போது உனது வங்கிக் கணக்குக்கு அரசு வழங்கிய 6,500 ரூபாய் உதவித்தொகை வந்துள்ளது. உனக்கு வருகை பதிவேடு 75 சதவீதத்துக்கு குறைவாக இருப்பதால், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்டு டி.சி. பெற்றுச் செல்’ என  கல்லூரி பொறுப்பு முதல்வர் சந்தனமாரி தெரிவித்துள்ளார். ஆனால், மனோஜ் பணத்தைச் செலுத்தாமல், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு, அரசு விதிகளைப் பின்பற்றுமாறு போலீசார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று மதியம் கல்லூரிக்கு வந்த மனோஜ், முதல்வர் அறைக்குச் சென்று சந்தனமாரியிடம் டி.சியை கேட்டு வற்புறுத்தியுள்ளார். “நீ எங்கு புகார் அளித்தாலும் டி.சி. தர முடியாது. பணத்தைக் கட்டிவிட்டு டி.சி. பெற்றுச் செல்,” என முதல்வர் சந்தனமாரி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. மனோஜ், கல்லூரி முதல்வரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

அப்போது அங்கிருந்த உடற்கல்வி பேராசிரியர் பூபதி ராஜன், மனோஜை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், “எதுக்கெடுத்தாலும் நீ எதுக்குடா முந்திக்கிட்டு... முந்திக்கிட்டு வர்ற..." எனக் கூறி, அங்கிருந்த இரும்பு மேசையை எடுத்து பேராசிரியர் பூபதி ராஜனை நோக்கி வீசியிருக்கிறார். மேலும், “இனிமே குறுக்க... குறுக்க.. வந்து பேசுவியா...”? என மிரட்டியிருக்கிறார். இதில் பூபதி ராஜனுக்கு மூக்கிலும் பற்களிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியிருக்கிறது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து முதல்வர் சந்தனமாரியும், பேராசிரியர் பூபதி ராஜனும் பயத்தில் கூச்சலிட்டதைக் கேட்டு, சக மாணவர்களும் பேராசிரியர்களும் ஓடிவந்து இருவரையும் மீட்டனர். அதே நேரத்தில், கல்லூரியின் முதல் தளத்தில் நடந்த போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றிருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில் மற்றும் வேல் பாண்டி, மனோஜை சமாதானப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், காயமடைந்த பூபதி ராஜனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு, மாணவர் மனோஜ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெறும் 6,500 ரூபாய்க்காக அரசு விதிகளைச் சுட்டிக்காட்டி கல்லூரி நிர்வாகம் டி.சி. வழங்க மறுத்த சம்பவமும், ஆத்திரமடைந்த மாணவனின் தாக்குதலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

college student Professor Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe