தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, பாப்பம்மாள்புரம் 3-வது வார்டைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் பாலமுருகனின் மகன் அபிஷேக் குமார், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சம்பவத்தன்று, இவர் ஆண்டிபட்டி வைகை அணைச் சாலைப் பிரிவில் உள்ள நியூ பாண்டியர் என்ற தனியார் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க சுந்தர் என்ற நபர், மதுபோதையில் இருந்த நிலையில், அதே ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்க வந்துள்ளார். ‘பரோட்டா பார்சல் எனக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும்’ என்று கூறி, சுந்தர் அபிஷேக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்த சுந்தர், தான் வைத்திருந்த கூர்மையான கம்பியால் அபிஷேக்கை தலை மற்றும் காது உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த அபிஷேக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அடிபட்ட அபிஷேக்கைப் பார்க்க வந்த பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், அபிஷேக்கைத் தாக்கிய நபரைக் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தாக்கிய நபரைக் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஆண்டிபட்டி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சுந்தரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டியில், ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.