கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய 13 வயது மகன் ரோகித் அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் நேற்று (02.07.2025) மாலை 4 மணியளவில் மர்ம நபர்களால் சிறுவன் காரில் கடத்தி செல்லப்பட்டார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் இது குறித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்திருந்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நேற்று (03.07.2025) காலை அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது அஞ்செட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலம் இருப்பதாகத் தகவல் வந்தது. இதையடுத்து போலீசாரும் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியின் சாலையோரத்தில் சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டனர். அங்கிருந்து சிறுவனின் சடலத்தைக் கொண்டு சென்று அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் வைத்துப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இந்த கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்று தெரிய வேண்டும். சிறுவனைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியது யார்?. அது தெரியும் வரை சிறுவனின் உடலைத் தரமாட்டோம் எங்களுக்குப் பிரேதப் பரிசோதனை முக்கியம் இல்லை. இதில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை அறிய வேண்டும். அதுவரைக்கும் நாங்கள் உடலை வழங்க மாட்டோம். பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது. உடனடியாக உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் மாவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாதேவா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment
a4294
College student arrested for case of boy Photograph: (krishnagiri)

புட்டண்ணன் என்பவரின் மகனான மாதேவன் கிருஷ்ணகிரி அரசுக் கலை கல்லூரியில் பயின்று வந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அப்பெண்ணுடன் மாதேவன் தனிமையில் இருந்துள்ளார். இதை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை ரோகித் எங்கே வெளியே சொல்லி விடுவானோ என்ற பயத்தில் மாதேவன் கர்நாடகாவை சேர்ந்த மாதேவா என்ற மற்றொரு நண்பனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரண்டாம் தேதி இரண்டு பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை பேசி அழைத்து காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். வாங்கி வைத்திருந்த மதுவை சிறுவனுடைய வாயில் ஊற்றி மயக்கம் அடைய செய்துள்ளனர். பின்னர் கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி ஆழப் பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தற்போது மாதேவனின் காதலியான அரசு கலை கல்லூரி மாணவி ரதியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.