கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூரில் நேற்று (27.09.2025) இரவு நடந்த துயர சம்பவம், குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், இன்று (28.09.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட பிரச்சார கூட்ட நெரிசல் காரணமாக இந்நிகழ்ச்சியில் கூடியிருந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். நேற்று 39 பேர், இன்றைக்கு ஒருத்தர் என மொத்தம் 40 பேர் இந்த சம்பவத்தால் இறந்தனர். இது அனைவருக்குமே மிகப் பெரிய துயரத்தை அளித்துள்ள ஒரு செய்தியாகும்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உட்பட அனைத்து துறை அலுவலர்களையும் முடுக்கிவிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்திடத் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் காயம் ஏற்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சையானது சிறந்த முறையில் அளிக்கப்பட்டது. இருப்பினும் சம்பவ இடத்திலிருந்து இறந்த நிலையில் 39 நபர்கள் கொண்டுவரப்பட்டனர் இன்று மேல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஒருவரும் சேர்த்து மொத்தம் 40 பேர் இறந்த செய்தி மிகத் தீவிரமான செய்தியாக உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவோடு இரவாக இந்த செய்திகளைக் கேள்விப்பட்டு இறந்த குடும்பங்களுக்கு நிவாரணமும், காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவார்களுக்கு நிவாரணமும் அளித்துவிட்டுச் சென்றார். இரவோடு இரவாகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரையும் இங்கு அனுப்பி வைத்துவிட்டு கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு மருத்துவக் குழுக்களையும் சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற இடங்களிலிருந்து சுமார் 114 டாக்டர்கள் 23 செவிலியர்கள் உட்பட அனைத்து குழுக்களையும் இங்கு அனுப்பி வைத்தார். தடயவியல் வல்லுநர்கள் பிற மாவட்டங்களிலிருந்து 16 பேரும், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரும் இதற்கான பணிகளைச் செய்து வந்தார்கள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் சுமார் 220 மற்றும் 115 செவிலியர்கள் உட்பட பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தீவிர சிகிச்சை அளிப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளிலும், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சுமார் 110 நபர்கள் மருத்துவச் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இறந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூபாய் 10 லட்சமும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் நிவாரண நிதியாக அறிவிப்பு செய்துள்ளார். மேலும் முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனடியாக இங்கு வருகை புரிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் அவர்களுக்கு உடன் இருப்பவர்களையும் பார்த்து ஆறுதல் அளித்து இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திச் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாருக்கேனும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அந்த அறையில் தொடர்பு கொள்ள மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டன. இவை தவிர உயிரிழந்த 39 நபர்களுக்கும், இரவோடு இரவாக சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆணையின்படி உடனடியாகப் பிரேதப் பரிசோதனை செய்து அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் தமிழ்நாடு அரசின் தீவிர உத்தரவுகள் மற்றும் ஆணைகளின் படியும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வருகை புரிந்து கொடுத்த கட்டளையின் பேரிலும் அனைத்து சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனையில் எந்தவித குறைபாடும் இல்லாமல் மருந்துகள் மாத்திரைகள் வழங்கி அவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற விவரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தமிழ்நாடு அரசு எடுத்த சிறப்பான இந்த சீரிய முயற்சியினால் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இங்கு வருகை புரிந்த அனைத்துப் பயனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு அவர்களுக்கு எங்கிருந்து என்ன மருந்து மாத்திரைகள் வேண்டுமோ அனைத்தும் வழங்கப்பட்டு சிகிச்சை முறைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.