திருநெல்வேலி மாவட்டம் மேலடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் இந்தக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கல்லூரியில் எலிக் காய்ச்சல் பரவியது தொடர்பாகத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “கல்லூரி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பான குளோரினேஷன் சரிவர இயங்காத காரணத்தினால் எலிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
அங்குத் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அனைத்துமே வெளியேற்றப்பட்டுவிட்டது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே பயன்பாட்டிற்கும், குடிநீருக்காகவும் , சமையல் செய்ய என அனைத்து புழக்கத்திற்குமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எலிக் காய்ச்சல் பாதிப்பு குறித்து உடனடியாக கண்டறியப்பட்டதால் 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருந்தது. பாதிக்கப்பட்ட அனைவருமே நலமாக உள்ளனர். கல்லூரி வளாகத்தைச் சுகாதாரத் துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதோடு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைத்திருக்கக்கூடிய தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் நீர்நிலைகளில் ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பாதிக்கப்பட்ட கல்லூரியில் இன்று (12.10.2025) வங்கி பணிக்கான முதற்கட்ட தேர்வு நடைபெறுகிறது. இதில் 1270 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்வெழுத உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் அனுமதிக்கப்பட்டுத் தேர்வானது 09:30 மணியளவில் தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.