கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ஜான் லூயிஸ். இவர் எலவனாசூர்கோட்டையில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஜான் லூயிஸ் வெள்ளையூர், நத்தகாளி, ஏமம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பலரிடம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உல்லாச வாழ்க்கை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளார்.
இதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஜான் லூயிஸின் வீட்டுக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் அவமானமடைந்த அவரது குடும்பத்தினர், 6 சவரன் தங்க நகைகளை ஜான் லூயிஸிடம் கொடுத்து, “இதை வைத்து கடனை அடைத்துவிடு” என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 29 ஆம் தேதி காலை 11 மணியளவில் 6 சவரன் நகைகளை வங்கியில் அடகு வைத்த ஜான் லூயிஸ், ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இரு மர்ம நபர்கள் கத்தி மிரட்டி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதாக அன்று இரவு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜான் லூயிஸிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் லூயிஸ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது ஸ்டைலில் விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் ஜான் லூயிஸ் நடத்திய நாடகம் அம்பலமாகியது. ஏற்கெனவே கடன் வாங்கிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜான் லூயிஸ், நகையை அடகு வைத்த பணத்தையும் மொத்தமாக அபகரிக்க நினைத்துள்ளார். அதன்படி வங்கியில் இருந்து வரும் வழியில் பணத்தைப் பதுக்கி வைத்த ஜான் லூயிஸ், காவல்நிலையத்தில் போலி புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜான் லூயிஸின் இரு சக்கர வாகனத்தைச் சோதனையிட்ட போலீசார், அதில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தையும் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொய் புகார் அளித்ததாக ஜான் லூயிஸ் மீது வழக்குப் பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும், 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Follow Us