Collecting several lakhs for a dance performance - Temple administration shows its gratitude Photograph: (temple)
சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு சிவன் நடராஜ வடிவத்தில் நடனக் கடவுளாகக் கருதப்படுகிறார். பரதநாட்டியம் என்பது அவரது தாண்டவத்தின் வடிவம் என்கிறார்கள்.
கோவிலில், சிவபெருமான் நடனமாடும் நிலையில் உள்ளதால் இது நடனக்கலையை வழிபடுவதற்கான உலகின் ஒரே கோவில் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பரதநாட்டியம் என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, அது நடராஜருக்குச் செய்யும் பிரார்த்தனை என நடனக் கலைஞர்கள் நடனத்தின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும் நடராஜரை வணங்கி அவர்களின் நாட்டிய கலைகளை அரங்கேற்றம் செய்வதும் கோவிலில் நடனமாடி ஆசி பெறுவதை பாக்கியமாக கருதி வருகிறார்கள்.
இதனைப் பயன்படுத்தி தற்போது தமிழக மட்டுமல்லாமல் வெளிநாடு வெளி மாநிலங்களில் நாட்டிய கலைஞர்களிடம் பெரும் அளவில் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா கூறுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியம் ஆடுவதை நடன கலைஞர்கள் பாக்கியமாக கருதி இங்கு வந்து நடனம் ஆடி ஆசி பெறுகிறார்கள். இதனை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்தினர் நடராஜர் கோவிலை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடராஜர் கோவிலில் தீட்சிதர் ஒருவர் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் ஐந்து வயது முதல் 50 வயது உள்ளவர்களை நடனம் ஆடுவதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அப்போது அதிக நேரம் வெயிலில் காத்திருந்ததால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்தனர்.
மேலும் சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து வந்த நடன கலைஞர்களிடம் பெரும் வசூல் செய்தனர். இதற்கு கோவில் நிர்வாகத்திற்கு சரி பாதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதே தீட்சிதர் ஓராண்டுக்குப் பிறகு இதேபோல் ஐந்தாயிரம் நடனக் கலைஞர்களைக் கொண்டு உலக சாதனை படைப்பதாக நாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு நடராஜர் கோவிலில் இது போன்ற எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஜன 11-ந்தேதி சீர்காழியைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் சிதம்பரம் தனியார் நாட்டிய பள்ளி உரிமையாளரும் இணைந்து நடராஜர் கோவில் உள்ளே உள்ள கொடிமரம் அருகே 940 நாட்டிய கலைஞர்கள் ஐந்து வயது முதல் 25 வயது உள்ளவர்களை நாட்டியமாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதில் தமிழகம், கேரளா, ஹைதராபாத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடினர்.
இவர்களிடம் நடராஜர் கோவிலில் நாட்டியமாட 3000 முதல் ஆளுக்கு தகுந்தார் போல் அதிகமாக வசூல் செய்துள்ளனர். இதில் சரிபாதியை கோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர். இதனால் தீட்சிதர்கள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் எந்த ஒரு பண வசூல் இல்லாமல் அமைதியாக நடன கலைஞர்கள் கோவிலில் பல்வேறு இடங்களில் நடனமாடி நடராஜர் இடம் ஆசி பெற்றதாக கருதி செல்வார்கள். ஆனால் தற்போது கோவிலுக்கு உள்ளே நடனம் ஆடினால் ஒரு தொகை, கோவிலுக்கு வெளி பிரகாரத்தில் நடனம் ஆடினால் ஒரு தொகை என வசூலிக்கப்படுகிறது.
கோவிலுக்கு உள்ளே செல்போனில் புகைப்படம் எடுத்தல் அங்குள்ள காவலாளிகளை கொண்டு கோவில் தீட்சிதர்கள் மிரட்டி அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிலுக்கு உள்ளே நடனமாடிய நாட்டிய மாணவர்கள் கலைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கோவிலில் உள்ளே நடனம் ஆடியதையும் கோவில் உள்ள புகைப்படம், சுய படம் எடுத்தனர். இதற்கு தீட்சிதர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை காவலாளிகளும் அமைதியாக இருந்தனர்.
இந்த நடன கலையை கொண்டு நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் பணம் வசூலிக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றி உள்ளனர். இதேபோல் கடந்த காலத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சினிமா ஷூட்டிங் எடுக்க அனுமதித்தது. தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை முதலாளிக்கு ஆயிரம் கால் மண்டபத்தை திருமண மண்டபமாக வாடகைக்கு விட்டது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது ஒரே நேரத்தில் 940 நாட்டிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் என 2000 பேர் கோவிலில் கூடியுள்ளனர். ஆனால் திடீரென கூட்ட நெரிசலில் ஆபத்து என்றால் அவர்களை மீட்க காவல்துறையோ, தீயணைப்பு துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. ஆபத்து நடைபெறாமல் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை திடீரென கூட்ட நெரிசல் அதிகமாகி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது.
அரசுக்கு தானே இதுகெட்ட பெயரை ஏற்படுத்தும். இதில் தீட்சிதர்கள் பணம் வருகிறது என அமைதியாக இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அரசு இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
Follow Us