Coimbatore student case - separate collection of statements Photograph: (police)
கடந்த வருடம் 02.11.2025 அன்று கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த 3 இளைஞர்கள், ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி, அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். மேலும் இந்தச ம்பவம் தொடர்பாக கருப்பசாமி, தவசி, காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேபோல பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த ஆண் நண்பர் ஆகிய இருவரையும் பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அறை பூட்டப்பட்டு சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதேபோல் மாணவியிடமும் 3 மணி நேரம் தனியாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்ட நிலையில் கோவை மாணவி விவகாரம் தொடர்பான இந்த வழக்கை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
Follow Us