கோவை மாவட்டம் இருகூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகவல் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்துக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துப் பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை நிற காரில் ஒரு பெண் சத்தமிட்டுக் கொண்டு செல்வதாக, பெண் ஒருவர் (ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்) காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மைய எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisment

உடனே சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அதற்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் வகையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதிக்கு வந்துள்ளனர். எனவே ஏஜி புதூரில் உள்ள பேக்கரியின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. அதில் வண்டியின் நம்பர் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதோடு  காரில் பெண் இருந்தது தொடர்பாக அந்த பதிவில் தெரியவில்லை. இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் மட்டுமே வந்துள்ளது.  

Advertisment

அதில் காரில் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது என்று மட்டும் தான் தகவல் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு எவ்விதமான புகாரும் இதுவரைக்கும் வரவில்லை. இருந்தாலும் கூட சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்குப் பின்னால், முன்னால் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். காரின் எண் இன்னும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்தார்.