கோப்புப்படம்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும்.
இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு” எனத் தெரிவித்திருந்தார். மற்றொருபுறம், மதுரையில் நேற்று (11.02.2026) நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொள்வார். அவர்கள் (காங்கிரஸ்) வந்தால் வரட்டும். வரவில்லை என்றால் போகட்டும். யாரும் கூட்டணியை நம்பி கட்சி இல்லை. அவர்களை நம்பி அரசியல் நடத்த முடியாது. அது அவர்களுடைய இஷ்டம். அது முதல்வருடைய இஷ்டம்” எனப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow Us