தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2026 சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க இருக்கிறது அதிமுக. கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கி வருகிறது. அண்மையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் 'அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ள அமித்ஷா, 'அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. பீகார்  சட்டமன்றத் தேர்தலிலும் என்டிஏ கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை நாங்கள் மதிக்கிறோம். தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தாய் மொழியான தமிழிலேயே கற்றுக் கொடுக்கலாமே. தமிழ்நாட்டில் தாய் மொழியில் கற்றுக் கொடுப்பதை எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் பாஜகவுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக பரவுவது கற்பனை கதைகள்.

தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.