சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு உரையாற்றியதோடு, ஆசிரியர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “குழந்தைகள் பயணிக்கும் திசையைத் தீர்மானிக்கும் ஆசிரியர்களை வரவேற்கிறேன். எப்போதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்; ஆனால், இன்று வரவேற்புரையின் மூலம் நமது அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார். பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் கற்பிப்பவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள்; மாணவர்களுக்கு அனுபவங்களைப் பகிர்ந்து வழிகாட்டுபவர்களே ஆசிரியர்கள். எதிர்கால சமூகத்திற்கு ஒளியேற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
மாணவர்களின் சிந்தனையைத் தாண்டி, அவர்களின் அறிவை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்களிடம் நண்பர்களாகப் பழக வேண்டும். உயர்கல்வி கற்பவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல; அவர்கள் நாளைய அரசியல்வாதிகள், மருத்துவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். அறத்தின் வலிமையையும், நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது; அன்பாகப் பழக வேண்டும். இன்று நீங்கள் விதைக்கும் நல்ல விதைகளே நாளை நம் சமூகத்தில் விளையப் போகின்றன. எதையும் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவிடம் (AI) கேட்கலாம் என்று மாணவர்கள் மெத்தனப் போக்குடன் இருந்துவிடக் கூடாது. மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களின் அறிவை மேம்படுத்துவது நமது கடமை” என்று தெரிவித்தார்.