கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சி தொடங்கிய நாள் முதல் சித்தராமையாவிற்கும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு இடையே உரசல் இருந்து வருவதாகத் தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்தநிலையில், இது குறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, "சிவகுமாருடனான எனது நட்பு பாலும், தேனும் போன்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எங்களைப் பிரிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வேலையில்லாத பல முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதன் காரணமாகவே, எங்கள் உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அசோக் அல்லது குமாரசாமிக்கு இந்த முயற்சிகள் வேலைக்கு ஆகாது என்பது புரிந்துவிட்டது. அவர்களுடைய எந்த முயற்சியும் எங்கள் உறவில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இனிவரும் காலங்களில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
சித்தராமையா, டி.கே சிவகுமாரின் செல்போனை ஒட்டுக் கேட்பதாக மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். அதில் எந்தவித உண்மையும் இல்லை. இப்படியெல்லாம், எதாவது ஒருவகையில் சிக்கலை ஏற்படுத்தி சிவகுமாரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதில் அவர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனது ஐந்து ஆண்டுக் கால ஆட்சியைச் சிறப்பாக நிறைவு செய்யும்” என்று தெரிவித்தார்.
Follow Us